13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளின் பெற்றோருக்கான Family Link வெளியீடு

13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளுக்காக Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகள், சுயவிவரங்கள் ஆகியவற்றுக்கான தனியுரிமை அறிக்கையைப் பாருங்கள்

பெற்றோரை வரவேற்கிறோம்!

உங்கள் நம்பிக்கை எங்களுக்கு முக்கியமானது. Google கணக்கை வைத்திருக்க உங்கள் பிள்ளையை அனுமதிப்பது என்பது பெரியதொரு முடிவாகும். அதைப் பற்றி மேலும் அறிய, சிறிது நேரம் ஒதுக்கி இந்த முக்கியமான தகவலைப் படிக்கவும்.

உங்கள் பிள்ளையின் Google கணக்கு

உங்கள் பிள்ளையின் Google கணக்கு நீங்கள் பயன்படுத்தும் கணக்கைப் போன்றதே ஆகும். பல Google தயாரிப்புகளையும் சேவைகளையும் இந்தக் கணக்கின் மூலம் அணுகலாம். இதில் பிள்ளைகளுக்காக வடிவமைக்கப்படாத அல்லது உருவாக்கப்படாத சேவைகளும் அடங்கும். உங்கள் பிள்ளை தனது கணக்கைப் பயன்படுத்தி இவற்றைச் செய்யலாம்:

  • Google Assistant, Chrome, Search ஆகியவற்றின் மூலம் கேள்விகளைக் கேட்கலாம், இணையத்தை அணுகலாம், இணையத்தில் தேடலாம்;

  • Gmail, SMS, வீடியோ, குரல் ஆகியவற்றையும் பிற தகவல்தொடர்பு முறைகளையும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளலாம்;

  • ஆப்ஸ், கேம்ஸ், இசை, திரைப்படங்கள் போன்ற பலவற்றைப் பதிவிறக்கலாம், வாங்கலாம், பயன்படுத்தி மகிழலாம்;

  • படங்கள், வீடியோக்கள், விளக்கக்காட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றையும் பிற உள்ளடக்கத்தையும் உருவாக்கலாம், பார்க்கலாம், பகிரலாம்;

  • Google Fitடில் செயல்பாட்டு நிலை, இதயத் துடிப்பு விகிதம் உள்ளிட்ட ஆரோக்கியமும் உடற்பயிற்சியும் சார்ந்த தகவல்களைக் கண்காணிக்கலாம் (உங்கள் பிள்ளை உபயோகிக்கும் சாதனங்களைப் பொறுத்து);

  • Googleளின் சேவைகளைப் பயன்படுத்தும்போது தொடர்புடைய விளம்பரங்களைப் பார்க்கலாம்.

Family Link & பெற்றோர் கண்காணிப்பு

அடிப்படை விதிகளை அமைக்கவும், உங்கள் பிள்ளை ஆன்லைனில் உலாவும்போது அவருக்கு வழிகாட்டவும் உங்களுக்கு உதவும் வகையில் Googleளின் Family Link ஆப்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. Google குடும்பக் குழுவில் உங்கள் பிள்ளை ஓர் உறுப்பினராகிவிடுவார். இந்தக் குழுவைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளையுடனும் குடும்பத்தின் வேறு நான்கு உறுப்பினர்களுடனும் (அதிகபட்சம்) நீங்கள் Google சேவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் பிள்ளையின் கணக்கைக் கண்காணிப்பதற்கான உதவியைப் பெற, பின்னர் நீங்கள் மற்றொரு பெற்றோரைச் சேர்க்க முடியும். Family Link ஆப்ஸைப் பயன்படுத்தி பெற்றோர் பின்வருபவற்றைச் செய்யலாம்:

  • பிள்ளையின் Android அல்லது ChromeOS சாதனங்களில் ‘சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்புகளை’ அமைப்பது;

  • பிள்ளை உள்நுழைந்துள்ள மற்றும் செயலிலுள்ள Android சாதனங்களின் இருப்பிடத்தைப் பார்ப்பது;

  • Google Play, Stadia ஆகியவற்றில் பிள்ளை பதிவிறக்குபவற்றையும் வாங்குபவற்றையும் அனுமதிப்பது அல்லது வயதிற்கு ஏற்ற உள்ளடக்கம் காட்டப்படும் வகையில் வரம்பிடுவது;

  • தனது Google கணக்கில் சேமிக்கப்படக்கூடிய செயல்பாட்டின் வகைகளையும், தனது அனுபவத்தைப் பிரத்தியேகமாக்க அவை பயன்படுத்தப்படக்கூடிய விதத்தையும் தேர்வுசெய்ய பிள்ளைக்கு உதவுவது;

  • பாதுகாப்பான தேடல் போன்ற Google Search அமைப்புகளை நிர்வகிப்பது;

  • Android, ChromeOS ஆகிய சாதனங்களில் பிள்ளையின் ஆப்ஸ் அனுமதிகளைப் பார்ப்பது. உதாரணமாக, மைக்ரோஃபோன், கேமரா, தொடர்புகள் ஆகியவற்றுக்கான அணுகலைப் பார்ப்பது;

  • YouTube, YouTube Kids ஆகியவை உட்பட YouTube சார்ந்தவற்றில் (கிடைக்கும்பட்சத்தில்) உள்ளடக்கம், அணுகல் மற்றும் பிற அமைப்புகளை மாற்றுவது.

பிள்ளையின் அனுபவத்தைக் கண்காணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் Family Linkகின் பெற்றோர் கட்டுப்பாடுகள் உதவினாலும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:

  • Family Linkகின் பெரும்பாலான பெற்றோர் கட்டுப்பாடுகளை இணையத்திலேயே நிர்வகிக்க முடியும். இருப்பினும் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரம்புகள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை நிர்வகிக்க, Android அல்லது iOSஸில் Family Link ஆப்ஸை நிறுவ வேண்டும்.

  • பாதுகாப்பான தேடல், Chrome இணையதளக் கட்டுப்பாடுகள், Play Store வடிப்பான்கள் போன்ற அமைப்புகள் பொருத்தமற்ற உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்றாலும் அவற்றையும் மீறி சில சமயங்களில் பொருத்தமற்ற உள்ளடக்கம் காட்டப்படலாம். இந்தக் கட்டுப்பாடுகள் இயக்கத்தில் இருந்தால்கூட உங்கள் பிள்ளை பார்க்கக்கூடாது என நீங்கள் நினைக்கும் உள்ளடக்கம் அவருக்குக் காட்டப்படக்கூடும்.

  • பின்வருபவற்றைச் செய்ய உங்கள் பிள்ளைக்குப் பெற்றோரின் அனுமதி தேவையில்லை: முன்பே அனுமதிக்கப்பட்ட ஆப்ஸ் அல்லது பிற உள்ளடக்கத்தை மீண்டும் பதிவிறக்குவது, ஆப்ஸ் புதுப்பிப்பை நிறுவுவது (உள்ளடக்கத்தைச் சேர்க்கும் அல்லது கூடுதல் தரவையோ அனுமதிகளையோ கேட்கும் புதுப்பிப்பாக இருந்தால்கூட), பகிரப்பட்ட உள்ளடக்கத்தை உங்கள் Google Play குடும்ப லைப்ரரியில் இருந்து பதிவிறக்குவது.

  • Family Link அம்சங்களில் சிலவற்றை வரம்பிற்குட்பட்டே பயன்படுத்த முடியும், அத்துடன் அவை செயல்படுவதற்குக் குறிப்பிட்ட அமைப்புகளும் சூழ்நிலைகளும் தேவை. உதாரணமாக, உங்கள் பிள்ளை இணக்கமான Android அல்லது ChromeOS சாதனத்தில் உள்நுழைந்திருக்கும்போது மட்டுமே உங்களால் அவரது ஆப்ஸைத் தடுக்க முடியும். உங்கள் பிள்ளையின் Android சாதனம் ஆன் செய்யப்பட்டிருப்பதுடன் இணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே Family Link ஆப்ஸில் அவரது சாதன இருப்பிடத்தைப் பார்க்க முடியும்.

உங்கள் பிள்ளைக்கு 13 வயதாகும்போது (நாட்டைப் பொறுத்து இந்த வயது வரம்பு மாறுபடலாம்) உங்களின் கண்காணிப்பின்றி அவரது கணக்கை அவரே நிர்வகிப்பதற்கு முடிவெடுக்கலாம்.

மற்றவர்களுக்கு மதிப்பளித்தல்

எங்களின் பல சேவைகளின் மூலமாக, அவற்றைப் பயன்படுத்தும் பிறரை உங்கள் பிள்ளை தொடர்புகொள்ளலாம். அனைவருக்கும் ஏற்ற வகையிலான மரியாதைக்குரிய சூழலைப் பராமரிக்க விரும்புகிறோம். அதாவது தவறாக நடந்துகொள்ளவோ தனக்குத்தானே அல்லது பிறருக்குத் தீங்கிழைக்கவோ கூடாது (அல்லது அச்சுறுத்தவோ இத்தகைய தவறான பயன்பாடு அல்லது தீங்கிழைக்கும் செயல்களை ஊக்குவிக்கவோ கூடாது) என்பது போன்ற அடிப்படை நடத்தை விதிகளை உங்கள் பிள்ளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, எங்களின் சேவைகளைப் பயன்படுத்தும்போது, தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், அவதூறு செய்தல், மிரட்டுதல், உபத்திரவமளித்தல், பிறரை அச்சுறுத்துதல், வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கத்தை (எ.கா. மக்களின் பிறப்பு, இனம், மதம், பாலினம், பாலியல் நாட்டம் போன்றவற்றின் அடிப்படையில் வெறுப்பையோ பாகுபாட்டையோ தூண்டும் உள்ளடக்கம்) பொதுவில் பகிர்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கத்தை வெளியிடுவது உங்களையும் உங்கள் பிள்ளையையும் சிவில் அல்லது குற்றவியல் ரீதியாகப் பொறுப்பேற்கும் சூழலுக்கு உட்படுத்தலாம்.

உங்கள் பிள்ளையின் தனியுரிமை

உங்கள் பிள்ளை அவருக்கென ஒரு Google கணக்கையோ சுயவிவரத்தையோ வைத்திருப்பதற்கு இந்தத் தனியுரிமை அறிக்கையிலும் Google தனியுரிமைக் கொள்கையிலும் விவரித்துள்ளவாறு உங்கள் பிள்ளையின் தகவல்களைச் சேகரிக்க, பயன்படுத்த அல்லது வெளியிட உங்கள் அனுமதி எங்களுக்குத் தேவைப்படலாம். எங்கள் சேவைகளைப் பயன்படுத்த உங்கள் பிள்ளையை நீங்கள் அனுமதிக்கும்போது நீங்களும் உங்கள் பிள்ளையும் எங்களை நம்பி உங்கள் தகவல்களை வழங்குகிறீர்கள். இது மிகப்பெரிய பொறுப்பு என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். உங்கள் தகவல்களைப் பாதுகாக்கவும் அவற்றுக்கான கட்டுப்பாட்டை உங்களுக்கே வழங்கவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். பொருந்தக்கூடிய பிராந்தியங்களில் இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு, YouTube செயல்பாடுகள், குறிப்பிட்ட Google சேவைகளை இணைத்தல் போன்றவற்றுக்கான செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை உங்கள் பிள்ளையே நிர்வகிக்கலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளுக்காக Family Link மூலம் நிர்வகிக்கப்படும் Google கணக்குகள், சுயவிவரங்கள் ஆகியவற்றுக்கான இந்தத் தனியுரிமை அறிக்கையும், Google தனியுரிமைக் கொள்கையும் Googleளின் தனியுரிமை நடைமுறைகளை விவரிக்கின்றன. உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவரத்திற்கென்று ஏதேனும் தனியுரிமை நடைமுறைகள் இருந்தால் (எ.கா.,பிரத்தியேகமாக்கிய விளம்பரங்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான தனியுரிமை நடைமுறைகள்), அந்த வேறுபாடுகள் குறித்து இந்தத் தனியுரிமை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உங்கள் பிள்ளை பயன்படுத்தக்கூடிய எந்தவொரு மூன்றாம் தரப்பு (Google அல்லாதது) ஆப்ஸ், செயல் அல்லது இணையதளத்தின் நடைமுறைகளுக்கும் இந்தத் தனியுரிமை அறிக்கை பொருந்தாது. மூன்றாம் தரப்பினரின் தரவுச் சேகரிப்பு, செயல்பாட்டில் இருக்கும் நடைமுறைகள் உட்பட அவற்றின் ஆப்ஸ், செயல்கள் மற்றும் தளங்களுக்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் நீங்கள் படிக்க வேண்டும். இதன் மூலம், உங்கள் பிள்ளைக்கு ஏற்ற உள்ளடக்கத்தை அவை வழங்குவதை அறிந்துகொள்ளலாம்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

Google கணக்கையோ சுயவிவரத்தையோ வைத்துக்கொள்ள உங்கள் பிள்ளைக்கு நீங்கள் அனுமதியளித்ததும் அவரது கணக்கு அல்லது சுயவிவரத்தைப் பொதுவாக உங்களுடையதைப் போலக் கையாண்டு தகவல்களைச் சேகரிக்கிறோம். உதாரணமாக இவற்றைச் சேகரிக்கிறோம்:

நீங்களும் உங்கள் பிள்ளையும் உருவாக்கும் அல்லது எங்களுக்கு வழங்கும் தகவல்கள்.

கணக்கையோ சுயவிவரத்தையோ உருவாக்கும் செயலாக்கத்தின் ஒரு பகுதியாகப் பெயரின் முற்பகுதி மற்றும் பிற்பகுதி, மின்னஞ்சல் முகவரி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல்களை நாங்கள் கேட்கலாம். நீங்களோ உங்கள் பிள்ளையோ வழங்கும் தகவல்களைச் சேகரிக்கிறோம் (எ.கா: ஒப்புதல் கோருவதற்காக உங்களைத் தொடர்புகொள்வதற்கு அவசியமான உங்கள் ஆன்லைன் தொடர்பு விவரங்கள்). உங்கள் பிள்ளை தனது கணக்கையோ சுயவிவரத்தையோ பயன்படுத்தும்போது (எ.கா. Google Photosஸில் படத்தைச் சேமிக்கும்போது, Google Driveவில் ஆவணத்தை உருவாக்கும்போது) உருவாக்கும், பதிவேற்றும் அல்லது பிறரிடமிருந்து பெறும் தகவல்களையும் சேகரிக்கிறோம்.

எங்கள் சேவைகளை உங்கள் பிள்ளை பயன்படுத்தும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்.

உங்கள் பிள்ளை பயன்படுத்தும் சேவைகளைப் பற்றியும் அவற்றை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் (Google Searchசில் வினவலை உள்ளிடுவது, Google Assistantடுடன் பேசுவது, YouTube Kidsஸில் வீடியோ பார்ப்பது போன்றவை) என்பதைப் பற்றியும் குறிப்பிட்ட தகவல்களைத் தானாகச் சேகரிக்கிறோம் சேமிக்கிறோம். இந்தத் தகவல்களில் அடங்குபவை:

  • உங்கள் பிள்ளை பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள் மற்றும் சாதனங்கள்

    Google சேவைகளை அணுக உங்கள் பிள்ளை பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள், சாதனங்கள் ஆகியவற்றின் தகவல்களை (எ.கா. பிரத்தியேக அடையாளங்காட்டிகள், உலாவி வகை மற்றும் அமைப்புகள், சாதனத்தின் வகை மற்றும் அமைப்புகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம், நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனத்தின் பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட மொபைல் நெட்வொர்க் தகவல்கள், ஆப்ஸின் பதிப்பு எண்) சேகரிக்கிறோம். உங்கள் பிள்ளை பயன்படுத்தும் ஆப்ஸ், உலாவிகள், சாதனங்கள் ஆகியவை எங்கள் சேவைகளைத் தொடர்புகொள்வதைப் பற்றிய தகவல்களையும் சேகரிக்கிறோம். IP முகவரி, சிதைவு அறிக்கைகள், சாதனத்தின் செயல்பாடு, உங்கள் பிள்ளை மேற்கொண்ட கோரிக்கையின் தேதி, நேரம், ரெஃபரர் URL ஆகியவை இதில் அடங்கும். உதாரணமாக உங்கள் பிள்ளையின் சாதனத்தில் உள்ள Google சேவை எங்கள் சேவையகங்களைத் தொடர்புகொள்ளும்போது (எ.கா. Play Storeரில் இருந்து ஓர் ஆப்ஸை நிறுவும்போது) இந்தத் தகவல்களைச் சேகரிக்கிறோம்.

  • உங்கள் பிள்ளையின் செயல்பாடு

    உங்கள் பிள்ளை எங்கள் சேவைகளில் மேற்கொள்ளும் செயல்பாடு குறித்த தகவல்களைச் சேகரிக்கிறோம், இது உங்கள் பிள்ளையின் அமைப்புகளைப் பொறுத்தது. Google Playயில் அவர் விரும்பக்கூடிய ஆப்ஸைப் பரிந்துரைப்பது போன்றவற்றைச் செய்ய இவற்றைப் பயன்படுத்துகிறோம். உங்கள் பிள்ளையின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை அவரே நிர்வகிக்கலாமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். உங்கள் பிள்ளை பயன்படுத்தும் தேடல் வார்த்தைகள், பார்க்கும் வீடியோக்கள், ஆடியோ அம்சங்களை அவர் பயன்படுத்தும்போது கிடைக்கும் குரல் மற்றும் ஆடியோ தகவல்கள், அவர் தொடர்புகொள்பவர்கள், உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள், அவருடைய Google கணக்குடன் ஒத்திசைக்கப்படும் Chrome உலாவியில் 'இதுவரை இணையத்தில் பார்த்தவை' போன்ற செயல்பாட்டுத் தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். அழைப்புகளைச் செய்வது பெறுவது, மெசேஜ்களை அனுப்புவது பெறுவது ஆகியவற்றுக்கு எங்கள் சேவைகளை (எ.கா. Google Meet, Duo) உங்கள் பிள்ளை பயன்படுத்தினால் தொலைபேசிப் பதிவுத் தகவல்களை நாங்கள் சேகரிக்கக்கூடும். உங்கள் பிள்ளை தனது Google கணக்கிற்குச் சென்று அவரது கணக்கிலோ சுயவிவரத்திலோ சேமிக்கப்பட்டிருக்கும் செயல்பாட்டுத் தகவல்களைக் கண்டறியலாம் நிர்வகிக்கலாம். அதுமட்டுமன்றி உங்கள் பிள்ளையின் Google கணக்கில் நீங்கள் உள்நுழைவதன் மூலமோ Family Linkகில் அவர்களின் சுயவிவரத்தை அணுகுவதன் மூலமோ அவரது செயல்பாட்டுத் தகவல்களை நிர்வகிக்க நீங்களும் உதவலாம்.

  • உங்கள் பிள்ளையின் இருப்பிடத் தகவல்கள்

    உங்கள் பிள்ளை எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது அவர் இருக்கின்ற இருப்பிடத்தைப் பற்றிய தகவலைச் சேகரிக்கிறோம். GPS, IP முகவரி, உங்கள் பிள்ளையின் சாதனத்திலிருந்து பெறும் சென்சார் தரவு ஆகியவற்றையும் அவரது சாதனத்திற்கு அருகிலுள்ளவை (வைஃபை ஆக்சஸ் பாயிண்ட்டுகள், செல்ஃபோன் டவர்கள், புளூடூத் இயக்கப்பட்டுள்ள சாதனங்கள் போன்றவை) குறித்த தகவல்களையும் பயன்படுத்தி அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்கலாம். நாங்கள் சேகரிக்கும் இருப்பிடத் தரவின் வகைகள் பகுதியளவில் உங்கள் கணக்கு அமைப்புகளையும் உங்கள் பிள்ளையின் சாதனங்களையும் சார்ந்திருக்கின்றன.

  • உங்கள் பிள்ளையின் குரல் மற்றும் ஆடியோ தகவல்கள்

    உங்கள் பிள்ளையின் குரல் மற்றும் ஆடியோ தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். உதாரணமாக, உங்கள் பிள்ளை கவனிக்கச் செய்யும் கட்டளைகளை (எ.கா. “OK Google” எனக் கூறுவது, மைக்ரோஃபோன் ஐகானைத் தொடுவது போன்றவை) பயன்படுத்தினால், கட்டளையைத் தொடர்ந்து வரும் பேச்சு/ஆடியோவின் பதிவு அவரது கோரிக்கைக்குப் பதிலளிப்பதற்காகச் செயலாக்கப்படும். அத்துடன் ‘இணையம் மற்றும் ஆப்ஸ் செயல்பாடு’ அமைப்பின் கீழ் உங்கள் பிள்ளையின் குரல் & ஆடியோ செயல்பாடு என்ற விருப்பம் தேர்வுசெய்யப்பட்டிருந்தால் உள்நுழைந்துள்ள சாதனத்தில் அவர் Assistant உடன் பேசும்போது அந்த உரையாடலும் அதற்குச் சில வினாடிகளுக்கு முந்தைய ஆடியோவும் ரெக்கார்டு செய்யப்பட்டு அவரது கணக்கில் சேமிக்கப்படலாம்.

உங்கள் பிள்ளையின் தகவலைச் சேகரிக்கவும் சேமித்து வைக்கவும் நாங்கள் குக்கீகள், பிக்சல் டேக்ஸ், சாதனச் சேமிப்பகம் (உலாவி இணையச் சேமிப்பகம், ஆப்ஸ் தரவுத் தற்காலிகச் சேமிப்புகள் போன்றவை), தரவுத்தளங்கள், சேவையகப் பதிவுகள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இந்தக் கணக்குகள் அல்லது சுயவிவரங்களுக்குக் கிடைக்கும் Google தயாரிப்புகளையும் சேவைகளையும் பயன்படுத்துவதற்கு நியாயமாகத் தேவைப்படும் தகவல்கள் தவிர வேறு கூடுதல் தனிப்பட்ட தகவல்களை உங்கள் பிள்ளை வழங்க வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் சேகரிக்கும் தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

உங்கள் பிள்ளையின் Google கணக்கு அல்லது சுயவிவரம் சம்பந்தமாக Google சேகரிக்கின்ற தரவை நாங்கள் எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடும் என்பது Googleளின் தனியுரிமைக் கொள்கையில் மிகவும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளையின் தகவல்களைப் பொதுவாக இவற்றுக்காகப் பயன்படுத்துவோம்: எங்கள் சேவைகளை வழங்குதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்; புதிய சேவைகளை உருவாக்குதல்; உங்கள் பிள்ளைக்காக எங்கள் சேவைகளைப் பிரத்தியேகமாக்குதல்; எங்கள் சேவைகளின் செயல்திறனை அளவிடுதல் மற்றும் அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுதல்; எங்கள் சேவைகள் தொடர்பாக உங்கள் பிள்ளையை நேரடியாகத் தொடர்புகொள்ளுதல்; எங்கள் சேவைகளின் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்த உதவுதல்.

இந்த நோக்கங்களுக்காக உங்கள் பிள்ளையின் தகவல்களைச் செயலாக்க பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். பிரத்தியேகத் தேடல் முடிவுகள், உங்கள் பிள்ளை எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதன் அடிப்படையிலான பிற அம்சங்கள் போன்றவற்றைப் பிள்ளைக்கு வழங்க, அவரது உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்யக்கூடிய தானியங்கு சிஸ்டங்களைப் பயன்படுத்துகிறோம். ஸ்பேம், மால்வேர், சட்டவிரோத உள்ளடக்கம் போன்ற தவறான பயன்பாட்டை நாங்கள் கண்டறிய உங்கள் பிள்ளையின் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்கிறோம். தரவில் உள்ள ஒழுங்கமைவுகளை அடையாளங்காண அல்காரிதங்களையும் பயன்படுத்துகிறோம். ஸ்பேம், மால்வேர், சட்டவிரோத உள்ளடக்கம், எங்கள் கொள்கைகளை மீறும் வகையில் எங்கள் சிஸ்டங்களைத் தவறான பிற வழிகளில் பயன்படுத்துதல் ஆகியவற்றை நாங்கள் கண்டறிந்தால், அதில் சம்பந்தப்பட்டவரின் கணக்கு அல்லது சுயவிவரத்தை நாங்கள் முடக்கக்கூடும் அல்லது தகுந்த பிற நடவடிக்கையை எடுக்கக்கூடும். சில சூழல்களில் உரிய அதிகாரிகளிடமும் மீறல் குறித்து நாங்கள் புகாரளிக்கக்கூடும்.

உங்கள் பிள்ளையின் அமைப்புகளைப் பொறுத்து பரிந்துரைகள், பிரத்தியேக உள்ளடக்கம், பிரத்தியேகத் தேடல் முடிவுகள் ஆகியவற்றை வழங்க உங்கள் பிள்ளையின் தகவலை நாங்கள் பயன்படுத்தக்கூடும். எடுத்துக்காட்டாக, உங்கள் பிள்ளையின் அமைப்புகளின் அடிப்படையில் அவர் விரும்பக்கூடிய புதிய ஆப்ஸைப் பரிந்துரைப்பதற்காக, அவர் நிறுவியுள்ள ஆப்ஸ் போன்ற தகவல்களை Google Play பயன்படுத்தக்கூடும்.

அத்துடன், மேலே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக உங்கள் பிள்ளையின் அமைப்புகளைப் பொறுத்து எங்கள் சேவைகளில் இருந்தும் உங்கள் பிள்ளையின் சாதனங்களில் இருந்தும் நாங்கள் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைக்கக்கூடும். உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவர அமைப்புகளின் அடிப்படையில், பிற தளங்களிலும் ஆப்ஸிலும் அவர் மேற்கொள்ளும் செயல்பாடுகள் Googleளின் சேவைகளை மேம்படுத்துவதற்காக அவரது தனிப்பட்ட தகவலுடன் தொடர்புபடுத்தப்படலாம்.

பிரத்தியேக விளம்பரங்களை உங்கள் பிள்ளைக்கு Google காட்டாது. அதாவது உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவரத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விளம்பரங்கள் அவருக்குக் காட்டப்படாது. அதற்குப் பதிலாக, உங்கள் பிள்ளை பார்க்கின்ற இணையதளம் அல்லது ஆப்ஸின் உள்ளடக்கம், தற்போதைய தேடல் வினவல், பொதுவான இருப்பிடம் (நகரம், மாநிலம் போன்றவை) போன்ற தகவல்களின் அடிப்படையில் அவருக்கு விளம்பரங்கள் காட்டப்படலாம். இணையத்தில் உலாவும்போது அல்லது Google அல்லாத ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, மூன்றாம் தரப்பினர் வழங்கும் பிரத்தியேக விளம்பரங்கள் உட்பட Google அல்லாத பிற விளம்பர வழங்குநர்கள் வழங்கும் விளம்பரங்களை உங்கள் பிள்ளை பார்க்கக்கூடும்.

உங்கள் பிள்ளை பகிரக்கூடிய தகவல்கள்

உங்கள் பிள்ளை அவரது Google கணக்கில் அல்லது சுயவிவரத்தில் உள்நுழைந்திருக்கும்போது படங்கள், வீடியோக்கள், ஆடியோ, இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களைப் பொதுவிலும் பிறருடனும் பகிர முடியும். உங்கள் பிள்ளை பொதுவில் தகவல்களைப் பகிர்ந்தால் Google Search போன்ற தேடல் இன்ஜின்களால் அவற்றை அணுக முடியும்.

Google பகிரும் தகவல்கள்

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் குறிப்பிட்ட சூழல்களில் Googleளுக்கு வெளியே பகிரப்படலாம். Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் எந்தவொரு சூழலிலும் தனிப்பட்ட தகவல்களைப் பகிர மாட்டோம். இதில் அடங்காதவை:

ஒப்புதலுடன் பகிர்தல்

ஒப்புதல் பெற்ற பின்னர் தனிப்பட்ட தகவல்களை Googleளைச் சாராத நிறுவனங்களுடன் தேவைக்கேற்ற சூழல்களில் பகிர்வோம்.

உங்கள் குடும்பக் குழுவுடன் பகிர்தல்

உங்கள் பிள்ளையின் பெயர், படம், மின்னஞ்சல் முகவரி, அவர் Playயில் வாங்கியவை உள்ளிட்ட அவரது தகவல்கள் Googleளில் உங்கள் குடும்பக் குழு உறுப்பினர்களுடன் பகிரப்படலாம்.

வெளி நிறுவனங்களின் செயலாக்கத்திற்காகப் பகிர்தல்

தனிப்பட்ட தகவல்களை எங்களுக்காகச் செயலாக்க அவற்றை எங்கள் இணை நிறுவனங்கள், நம்பகமான பிற பிசினஸ்கள், நபர்கள் ஆகியோருக்கு வழங்குகிறோம். எங்கள் வழிமுறைகளின் அடிப்படையிலும், இந்தத் தனியுரிமை அறிக்கை, Google தனியுரிமைக் கொள்கை, ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிற நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இணங்கும் வகையிலும் இதைச் செய்கிறோம்.

சட்டப்பூர்வக் காரணங்களுக்காகப் பகிர்தல்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைச் செய்ய, தகவல்களை அணுகுவது, பயன்படுத்துவது, பாதுகாப்பது, வெளியிடுவது போன்றவை அவசியமென்ற நன்னம்பிக்கை எங்களுக்கு இருந்தால் மட்டுமே Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வோம்:

  • பொருந்தக்கூடிய சட்டம், ஒழுங்குமுறை, சட்டரீதியான செயல்முறை போன்றவற்றுக்கு இணங்குதல் அல்லது நிறைவேற்றியாக வேண்டிய அரசாங்கக் கோரிக்கையை நிறைவேற்றுதல்;

  • சாத்தியமுள்ள மீறல்களை விசாரிப்பது உட்பட பொருந்தக்கூடிய சேவை விதிமுறைகளை அமலாக்குதல்;

  • மோசடி, பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பச் சிக்கல்கள் போன்றவற்றைக் கண்டறிதல், தடுத்தல் அல்லது சரிசெய்தல்;

  • சட்டப்படி அவசியமென்றால் அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டால் எங்கள் பயனர்கள், பொதுமக்கள் மற்றும் Googleளின் உரிமைகள், சொத்து, பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தீங்கு ஏற்படாமல் பாதுகாத்தல்.

தனிப்பட்ட ஒருவரை அடையாளங்காண முடியாத தகவலை (எங்கள் சேவைகளின் பொது உபயோகம் குறித்த போக்குகள் போன்றவை) பொதுவிலும், வெளியீட்டாளர்கள், விளம்பரதாரர்கள், டெவெலப்பர்கள் அல்லது உரிமைகளைக் கொண்டவர்கள் போன்ற எங்கள் கூட்டாளர்களுடனும் நாங்கள் பகிரக்கூடும். எடுத்துக்காட்டாக எங்கள் சேவைகளின் பொது உபயோகம் குறித்த போக்குகளைக் காட்ட தகவல்களைப் பொதுவில் பகிர்வோம். விளம்பரம் மற்றும் அளவீட்டு நோக்கங்களுக்காகத் தங்கள் சொந்தக் குக்கீகள் அல்லது அதைப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உலாவிகள் அல்லது சாதனங்களில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதற்கும் குறிப்பிட்ட பார்ட்னர்களை அனுமதிப்போம்.

உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட தகவலுக்கான அணுகல்

உங்கள் பிள்ளைக்கு Google கணக்கு இருந்தால் அதில் நீங்கள் உள்நுழைந்து அவரது தகவல்களை அணுகலாம், மாற்றலாம், அகற்றலாம், பதிவிறக்கலாம், அத்துடன் அவற்றின் செயலாக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். உங்கள் பிள்ளையின் கடவுச்சொல்லை நீங்கள் மறந்துவிட்டால் Family Link ஆப்ஸ் அல்லது இணையத்தில் உள்ள Family Link அமைப்புகள் மூலம் அதை மீட்டமைக்கலாம். உள்நுழைந்ததும் Google தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ள Google செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் பிள்ளையின் தனியுரிமை அமைப்புகளையும் தகவல்களையும் நிர்வகிக்க உதவலாம்.

உங்கள் பிள்ளைக்குச் சுயவிவரம் இருந்தால் Family Link ஆப்ஸ் அல்லது இணையத்தில் உள்ள Family Link அமைப்புகள் மூலம் அவரது தகவல்களை அணுகலாம், மாற்றலாம், அகற்றலாம், பதிவிறக்கலாம், அத்துடன் அவற்றின் செயலாக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் பிள்ளை “எனது செயல்பாடுகள்” என்பதில் அவரது கடந்தகாலச் செயல்பாடுகளை நீக்க முடியும், அத்துடன் ஆப்ஸ் அனுமதிகளை (சாதன இருப்பிடம், மைக்ரோஃபோன், தொடர்புகள் போன்றவை உட்பட) இயல்பாகவே மூன்றாம் தரப்பினருக்கு வழங்கவும் முடியும். இவற்றைச் செய்யவும் நீங்கள் Family Linkகைப் பயன்படுத்தலாம்: உங்கள் பிள்ளையின் Google கணக்கு அல்லது சுயவிவரத் தகவல்களைத் திருத்துவது அல்லது மாற்றுவது, ஆப்ஸ் உபயோகத்தையும் ஆப்ஸ் அனுமதிகளையும் பார்ப்பது, உங்கள் பிள்ளையின் தகவல்களை அணுக ஆப்ஸ் அல்லது மூன்றாம் தரப்புச் சேவைகளுக்குக் குறிப்பிட்ட அனுமதிகளை வழங்குவதற்கான உங்கள் பிள்ளையின் ஆற்றலை நிர்வகிப்பது.

உங்கள் பிள்ளையின் தகவல்கள் மேற்கொண்டு சேகரிக்கப்படுவதை அல்லது பயன்படுத்தப்படுவதை எப்போதாவது நிறுத்த விரும்பினால் Family Link ஆப்ஸ் அல்லது இணையத்தில் உள்ள Family Link அமைப்புகளுக்குச் சென்று உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவரத்தில் உள்ள ‘தகவல்’ பக்கத்தில் “கணக்கை நீக்கு” அல்லது “சுயவிவரத்தை நீக்கு” என்பதைக் கிளிக் செய்து உங்கள் பிள்ளையின் Google கணக்கு அல்லது சுயவிவரத்தை நீக்கலாம். தகுந்த கால அளவிற்குள் உங்கள் பிள்ளையின் கணக்கு அல்லது சுயவிவரத் தகவல்கள் நிரந்தரமாக நீக்கப்படும்.

எங்களைத் தொடர்புகொள்க

உங்கள் பிள்ளையின் Google கணக்கு அல்லது சுயவிவரம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். Family Link, உங்கள் பிள்ளையின் Google கணக்கு, சுயவிவரம் ஆகியவற்றைப் பற்றிய கூடுதல் தகவல்களை எங்கள் உதவி மையத்தில் தெரிந்துகொள்ளலாம். Family Link, உங்கள் பிள்ளையின் Google கணக்கு, சுயவிவரம் ஆகியவற்றைப் பற்றிய கருத்தையும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம். இதைச் செய்ய, Family Link ஆப்ஸிற்குச் சென்று மெனு ☰ > உதவி & கருத்து > கருத்து வழங்குக என்பதைத் தட்டவும் அல்லது கீழே உள்ள முகவரி மூலமோ மின்னஞ்சல் மூலமோ எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Google
1600 Amphitheatre Parkway
Mountain View, CA 94043 USA
ஃபோன்: +1 855 696 1131 (USA)
பிற நாட்டினர் g.co/FamilyLink/Contact என்ற இணைப்பிற்குச் செல்லவும்

உங்கள் பிள்ளையின் தரவை Google எப்படிச் சேகரித்துப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் Googleளையோ எங்கள் தரவுப் பாதுகாப்பு அலுவலகத்தையோ நீங்கள் தொடர்புகொள்ளலாம். உள்ளூர்ச் சட்டத்தின் கீழ் உங்கள் உரிமைகள் தொடர்பாகப் பிரச்சனைகள் இருந்தால் உள்ளூர்த் தரவுப் பாதுகாப்பு ஆணையத்தையும் தொடர்புகொள்ளலாம்.

13 வயதிற்குட்பட்ட (அல்லது உங்கள் நாட்டில் பொருந்தக்கூடிய வயதிற்குட்பட்ட) பிள்ளைகளுக்கான Family Link வெளியீட்டைப் பாருங்கள்

Google ஆப்ஸ்
முதன்மை மெனு